சமூக முன்னேற்றத்துக்காக பணியாற்றிய கரூர் மாவட்ட மாணவி ரக்ஷனாவுக்கு காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது.
அதன்படி, இந்த ஆண்டு கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டி கிராமத்தைச் சேர்ந்த ரக்ஷனாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கரூர் மாவட்டம் முழுவதும் மரங்களை நன்கொடையாக வழங்கியதுடன், உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு சூழல் சார்ந்த பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மூன்று மாணவர்கள் தொடர்ந்து படிப்பை மேற்கொள்ள தனது பெற்றோர் மூலமாக நிதி அளித்தார்.
இத்தகைய செயல்களைப் பாராட்டி, ரக்ஷனாவுக்கு மாநில அரசின் விருதாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டு பத்திரத்தையும் முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினார்.

error: Content is protected !!