மாணவர்களுக்கு கல்வியுடன் சுகாதாரத்தை போதிக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருச்சியில் தூய்மையான பள்ளி மற்றும் தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ் 2017-18ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 48 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நேற்று நடந்தது.
கலெக்டர் ராஜாமணி பாராட்டு சான்று, பரிசுத்தொகை வழங்கி பேசுகையில், ‘மாணவர்களின் வாழ்க்கைதரம் மேம்பட ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி பாடங்களை கற்றுக்கொடுப்பது போல வாழ்க்கை பாடங்களையும், நல்ல பழக்கவழக்கங்களையும், பண்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். திருச்சியை முழுமையான சுகாதாரம் கொண்ட மாவட்டமாக மத்திய மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன. கல்வியோடு சுகாதாரத்தையும் மாணவர்களை பின்பற்ற செய்ய வேண்டும்’ என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்