3.26 நாக் (NAAC) புள்ளிகள் கொண்ட கல்லூரிகளுக்கு நேரடி தன்னாட்சி அந்தஸ்து: யுஜிசி அறிவிப்பு

நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் 3.26 பெற்றிருக்கும் கல்லூரிகளில் நிபுணர் குழு ஆய்வு இல்லாமலேயே தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
யுஜிசி -2018 வழிகாட்டுதலின்படி, தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்லூரிகள் பாடத் திட்டத்தை தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதோடு, அந்தந்தப் பகுதி தேவைகளுக்கு ஏற்ப படிப்புகளையும் தாங்களே மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
இந்த நிலையில், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஏ- கிரேடு நாக் புள்ளிகளை வைத்திருக்கும் கல்லூரிகளிடமிருந்து, தன்னாட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை வரவேற்றுள்ளது.
இதில், முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளில் நாக் புள்ளிகள் 3.26 முதல் 3.50 வரை பெற்றிருக்கும் கல்லூரிகளுக்கு நிபுணர் குழு நேரடி ஆய்வு இல்லாமலேயே தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, தன்னாட்சி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் நாக் புள்ளிகள் 3.51 அல்லது அதற்கு மேல் பெற்றிருக்கும் கல்லூரிகளுக்கும், குறைந்தபட்சம் மூன்று படிப்புகளுக்கு என்.பி.ஏ. (தேசிய அங்கீகார வாரியம்) புள்ளிகள் 750 பெற்றிருக்கும் கல்லூரிகளுக்கும் நிபுணர் குழு நேரடி ஆய்வு இல்லாமலேயே தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!